சர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு
சர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள், அதை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுவிநியோகத் திட்டத்தில் 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 குடும்ப அட்டைதாரர்கள், சர்க்கரை மட்டும் வாங்கும் அட்டைகளை வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோரின் கோரிக்கையை ஏற்று, இந்த அட்டைகளை அரிசி பெறும் அட்டையாக மாற்ற முதலமைச்சர் ஆணையிட்டிருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அதன்படி, விருப்பமுள்ள சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், www.tnpds.gov.in என்ற இணையத்தளத்தில் வரும் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் காமராஜ், விண்ணப்பங்கள் மீது தகுதியின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.