ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநரிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். அப்போது அதிகாரிகள் மூலம் மக்களின் குறைகளை ஆளுநர் குறிப்பெடுத்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள சுகாதாரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கருப்புக்கொடி பேரணி நடத்தியது.
இந்நிலையில் கடலூர் ஆய்வை முடித்துவிட்டு ஆளுநர் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே புதுகல்பாக்கத்தில் ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயம் அடைந்தார். அந்தப் பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.