கலைஞர் பல்கலை. மசோதா.. ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்த அதிரடி முடிவு!
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் இந்த மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்தது. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்தது. இதையடுத்து இது குறித்து குடியரசு தலைவர், உச்ச நீதிமன்றத்துக்கு குறிப்பு அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். இது வரும் 19ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் கலைஞர் பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா மீது சட்ட ஆலோசனையை பெறவும், குடியரசு தலைவரின் ஒப்புதலை கேட்பதற்காகவும் ஆளுநர் ரவி, குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.