தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொறுப்பு ஆளுநராக பதவியில் இருந்து வித்யாசாகர் ராவ் விடைபெற்றார்.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து, மகாராஷ்டிர ஆளுநரான வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார். தமது பதவிக்காலத்தில் ஆளுநர் மாளிகை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளித்திருந்தார். தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் சிலை, ஆளுநர் மாளிகையில் நிறுவப்படவும் காரணமாக இருந்தார்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே கடந்த ஓராண்டாக பொறுப்பு ஆளுநர் பதவியில் இருந்த வித்யாசாகர் ராவ் விடைபெற்றுள்ளார். இதையொட்டி சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் வழியனுப்பு விழாவில் பங்கேற்றனர். பிரியா விடையின் போது பொறுப்பு வித்யாசாகர் ராவுக்கு, முதலமைச்சர் பழனிசாமி சால்வை அணிவித்தார். முன்னதாக காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை வித்யாசாகர் ராவ் ஏற்றுக்கொண்டார்.