நேற்று ஆளுநர் மாளிகை, செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், 'அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்களில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார்.
தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் அவர் உள்ள நிலையில், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். அவர் மீதான விசாரணை என்பது நேர்மையாக நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டது.
ஆளுநரின் இந்த செயல்பாட்டிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் அவர் அரசியல் சாசனத்தை மீறுகிறார் என்றும் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். அடுத்த சில மணி நேரங்களில் ஆளுநரின் இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம், ஆளுநர் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்தது. செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறவும் ஆளுநர் ரவி முடிவு செய்துள்ளார் எனத் தகவல் வெளியானது.
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியதாக செய்தி வெளியானது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை. இதைச் சட்டரீதியாகச் சந்திப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் (நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எழுதிய கடிதம்) தற்போது வெளியாகியுள்ளது. புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள அக்கடிதத்தில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்களின் ஆலோசனைகளை பெற்று இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது. ஆகவே செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பான உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அக்கடிதத்தில், “இது தொடர்பாக அட்டர்னி ஜெனரலின் கருத்தையும் கேட்பது சரியாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அவர்களால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அட்டர்னி ஜெனரலை (மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்) அணுகி கருத்து கேட்க உள்ளேன். இதற்கிடையில், அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு, என்னிடம் இருந்து மீண்டும் தெரிவிக்கப்படும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
5 பக்கங்கள் கொண்ட இக்கடிதத்தில் மற்றொரு இடத்தில், “செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால், வழக்கில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அது சட்டதிட்டத்தை பாதிக்கும். இப்படியான சூழல்களில் இந்திய அரசியல் சாசன பிரிவுகள் 154, 163, 164 ஆகியவற்றின்கீழ், செந்தில் பாலாஜியை நீக்க எனக்கு அதிகாரம் உள்ளது. இதன் அடிப்படையில் நான் அவரை நீக்குகிறேன்.
விளக்கம் தராமல் ஜூன் 1 மற்றும் 16 ஆகிய தேதிகளில், விரும்பத்தகாத மற்றும் வரம்பு மீறிய சொற்களை பயன்படுத்தி கடிதம் எழுதுனீர்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆளுநர்.
இக்கடிதம் தொடர்பான முழு விவரங்களை, இங்கே காணலாம்: