போக்குவரத்து தொழிற்சங்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த நிலையில், முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதனை முன்னிறுத்தி, வருகிற 15-ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
இதனைத் தொடர்ந்து, சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 8-ஆம் தேதி, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சருடனான இந்த பேச்சுவார்த்தை உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், வருகிற 12-ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு வருமாறு, போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு, தமிழக தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்திருக்கிறது. சென்னை தேனாம்பேட்டையில் DMS வளாகத்தில் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் யாஷிம் பேகம் தலைமையில் நடைபெறும் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், 10 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், அரசின் சார்பில் போக்குவரத்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்பார்கள் என கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்து தொழிற்சங்கங்கள், முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அமைச்சர் பங்கேற்க வேண்டும் என்றும், அவரது நேரடி பங்களிப்பு இல்லாவிட்டால், எந்த பயனும் இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.