"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" - அண்ணாமலை கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!

அதிமுக குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்றுகூடச் சொல்வேன்" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவன நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

கூட்டணியில் உள்ள அதிமுக பற்றியும் அண்ணாமலை இப்படி விமர்சித்திருந்ததால், அவருக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இதனால், அதிமுக - பாஜக ஆகிய கட்சிகள் இடையே விரிசல் அதிகமாகியுள்ளதா என்ற பேச்சும் பரவலாக எழுந்துள்ளது.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அண்ணாமலையின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”ஜெயலலிதா குறித்தும் அதிமுக ஆட்சி பற்றியும் விமர்சித்துள்ளது அண்ணாமலையின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது.

ஜெயலலிதாவின் ஆட்சியை தரக்குறைவாக விமர்சனம் செய்வது, ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. ஜெயலலிதா மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அவரது ஆட்சி தமிழ்நாட்டின் பொற்காலம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com