சாம்பார் சாதம், வத்தக்குழம்புடன் சீன அதிபருக்கு விருந்தோம்பல் !
தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வழங்கப்பட உள்ள உணவில் சீன உணவோடு இந்திய மற்றும் தென்னிந்திய பாரம்பரிய உணவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தங்கவுள்ள சீன அதிபருக்கு 28 வகையான உணவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிய உணவிற்கு வெங்காயம், இறைச்சியோடு சமைக்கப்பட்ட சாதம், முட்டைகோஸ், கேரட் கலந்து வறுத்த ஈரல், நூடுல்ஸ், காய்கறி சாலட், பயிறு வகைகள், சூப் வகைகள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்திற்கு வந்துவிட்டு சீன உணவுகளை மட்டும் சாப்பிட்டுச் சென்றால் எப்படி? சாம்பார் சாதம், வத்தக்குழம்பு, ரசம், பிரியாணி, பிரிஞ்சி சாதம், பட்டர் நான், சப்பாத்தி, ரொட்டி, புலாவ், கேரட் சூப் ஆகிய இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகளும் சீன அதிபருக்கு பரிமாறப்பட உள்ளன. காலை உணவாக சோயா, சிக்கன் டிக்கா, நூடுல்ஸ் வகைகள், பொறித்த கறியுடன் கூடிய கலவை சோறு, குளிர்பானம், ஸ்வீட், கேக் ஆகிய சீன உணவுகளோடு இட்லி, சாம்பார், தோசை, சட்னி, வெண்பொங்கல், பூரி, இடியாப்பம், வடைகறி உள்ளிட்ட நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளும் பரிமாரப்பட உள்ளன.
இவ்வளவு உணவு வகைகளை வைத்தால் ஏற்கெனவே சாப்பிட்டு பழக்கமுள்ள நமக்கே குழம்பிவிடும் அல்லவா? அதற்காகத்தான் ஒவ்வொரு உணவு குறித்த விளக்கத்தையும் அளிக்க தனித்தனி வல்லுநர்கள் உணவிற்கு அருகிலேயே நிற்கவைக்கப்பட உள்ளனர். விருந்தோம்பலுக்கு பெயர்போன தமிழ்நாட்டிற்கு வருகை தரும் விருந்தினரை, உணவில் மட்டும் மலைக்கச் செய்யாமல் அனுப்பிவிடுவோமா என்ன?.. அதனால்தான் சீன அதிருபருக்கு 28 வகையான உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன.