"ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலை: ஓபிஎஸ்-க்கு புரிதல் இல்லை” பழனிவேல் தியாகராஜன் பதில்
திமுகவின் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலை குறித்த முன்னாள் நிதியமைச்சர் ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு, “ஓபி.எஸ். -க்கு இதுபற்றி புரிதல் இல்லை” என்று தமிழகத்தின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அதில், “திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பது அதன் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர அக்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆக, தேர்தலில் வெற்றிபெறுவதற்காகவே பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவோம் என திமுக வாக்குறுதி அளித்ததோ என சந்தேகம் எழுகிறது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற முந்தைய நிலைப்பாட்டை நிலைநாட்டி அவற்றின் விலை குறைய மு.க.ஸ்டாலின் வழிவகுக்க வேண்டும்” என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திக்கேயன் மற்றும் சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து சிகிச்சை எடுத்துக்கொள்வோருக்கான படுக்கை வசதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில், “மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கொரானாவால் நாம் கற்றுக்கொண்ட பாடம் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்பதற்கிணங்க மருத்துவத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” என்று பேசினார்.
தொடர்ந்து அவரிடம் ஒபிஎஸ் குற்றச்சாட்டு குறித்த பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இந்த விஷயத்தில் ஓபிஎஸ்க்கு புரிதல் இல்லை. இதற்கு நான் பலமுறை பதலளித்துவிட்டேன்” என்றார்.