விஜய் பேச்சில் தவறான தகவல்கள்.. தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் தனது பரப்புரையில் கூறிய குற்றச்சாட்டுகளில் சில தவறானவை என, தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியதை, தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது.
தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு..
தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டிருக்கும் தகவலில், 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்த அலையாத்தி காடுகள், அரசின் முயற்சியால் இரண்டு மடங்காக உயர்ந்து, இன்று 90 சதுர கிலோ மீட்டராக இருப்பதாக தெரிவித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும், சதுப்புநில காடுகள் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நாகையில் கடல்சார் கல்லூரி இல்லை என்ற விஜய் பேசியிருந்த நிலையில், அங்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் இருப்பதாக, தகவல் சரிபார்ப்பகம் கூறியுள்ளது.
அதேபோல், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாடு வரும்போது நிபந்தனை விதிப்பீர்களா என விஜய் பேசியிருந்த நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்ற பிரதமரின் பேரணிக்கு, காவல் துறை 20 நிபந்தனைகளை விதித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.