தமிழகத்தில் வருகிற ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க தயாராக இருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தார். வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மே மாதத்துடன் முடிவடையும் என்பதால், அதன்பிறகு ஜூலை மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிப்பதாகக் கூறியிருந்தார். எனவே, மே 14ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உத்தரவை மாற்றி அமைத்து, மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம், இதனையே மனுவாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதன்படி, தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர் இன்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டுவருவது, தொகுதி மறுவரையறை செய்வது, இட ஒதுக்கீடு ஆகியவை தமிழக அரசின் பணிகள் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை தமிழக அரசு செய்து கொடுத்தால், ஜூலை மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கத் தயாராக இருப்பதாக, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.