காவல்துறையினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண டிஜிபி சங்கர் ஜிவால் புதிய முயற்சி!

தமிழ்நாடு காவல் துறையினர்களுக்காக, கடைநிலையில் உள்ள காவல்துறையினர் வரையிலும் பயன்பெறும் விதமாக வாட்ஸ்-அப் குழுக்களை அமைத்து செயல்படுமாறு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் அனைவரும் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வசதியாக, வாட்ஸ்-அப் குழுக்களை அமைத்து செயல்படுமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு போலீஸ் வெல்பேர் என்ற பெயரில் உருவாக்கப்படும் வாட்ஸ்-அப் குழுவில் டிஜிபி உள்ளிட்ட காவல்துறை தலைமை அதிகாரிகள் இருப்பார்கள். சென்னையை பொருத்தவரை இணை ஆணையர் தலைமையிலான வாட்ஸ்-அப் குழுவில், துணை மற்றும் உதவி ஆணையர்கள் இணைக்கப்படுவர்.

WhatsApp
WhatsAppFile Photo

பின்னர் துணை ஆணையர்கள் தலைமையிலான வாட்ஸ்-அப் குழுவை தொடங்கி, அதில் உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் இணைக்கப்படுவர். இதைத் தொடர்ந்து உதவி ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்படும் வாட்ஸ்-அப் குழுவில், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் கடைநிலை காவலர்கள் வரை இணைக்கப்படுவர்.

பிற நகரங்களை பொருத்தவரை துணை ஆணையர் தலைமையில் வாட்ஸ்-அப் குழு அமைக்கப்பட்டு உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் இடம்பெறுவர். மாவட்ட அளவில் ஏடிஎஸ்பி தலைமையில் வாட்ஸ்-அப் குழு அமைக்கப்பட்டு அதில், டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர்கள் இணைக்கப்படுவர்.

போலவே பிற நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் ஆய்வாளர்கள் தலைமையில் வாட்ஸ்-அப் குழுக்கள் அமைத்து கடைநிலை காவலர்கள் வரை இணைக்கப்படுவர்.

இந்த வாட்ஸ்-அப் குழுக்களில் காவல்துறை நலன் சார்ந்து பதிவிடப்படும் பதிவுகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க, தலைமை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ்-அப் குழுக்களுக்கு அப்பதிவுகள் அனுப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பதிவுகள் தலைமை அதிகாரிகள் இருக்கும் அடுத்தடுத்த குழுக்களுக்கு 30 நிமிடங்களில் அனுப்பப்படும். இந்த குழுக்களில் காவலர் நலன் சார்ந்த துறைரீதியான பதிவுகளை தவிர மற்ற பதிவுகளை பதிவிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com