திருப்பூர்: கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
திருப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர், அங்கு கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர் கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கிவைத்தார். மேலும் தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். திருப்பூரில் ஆய்வு முடித்த பின் கோவையில் ஆய்வு செய்தவதற்காக முதல்வர் சென்றுகொண்டிருந்தார். அப்போது, புதூர் பிரிவு பகுதியில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மக்களை சந்தித்த முதல்வர், அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களோடு காரில் அமர்ந்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டார்.