"இலவச தடுப்பூசிக்கு ஏற்பாடுகள் தீவிரம்!" - முதல்வர் பழனிசாமி உறுதி #ThulirkkumNambikkai
"கொரோனா தடுப்பூசி கிடைத்தவுடன், கடைகோடி மக்களுக்கும் இலவசமாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்றார் முதல்வர் பழனிசாமி.
தமிழகம் கொரோனாவில் இருந்து மீண்டும் வரும் நிலையில், 'துளிர்க்கும் நம்பிக்கை' என்ற தலைப்பில் புதிய தலைமுறை மற்றும் பேஸ்புக் நிறுவனம் இணைந்து சிறப்பு நிகழ்ச்சி நடத்தியது. நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நெறியாள்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா காலத்தை தமிழக அரசாங்கம் எப்படி கையாண்டது? நெருக்கடிகளை சமாளித்து மீண்டுவந்தது பற்றியும், இனிவரும் காலகட்டங்களை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்பது பற்றி புதிய தலைமுறைக்காக பிரத்யேகமாக பகிர்ந்துள்ளார்.
‘’சீனாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோதே தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கிவிட்டோம். முறையான சோதனைகள் செய்யப்பட்டதுடன், மாவட்ட ஆட்சியர்களிடம் கலந்தாலோசித்ததுடன், நானே பெரும்பாலான மாவட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டேன்.
ஆர்டி பிசிஆர் சோதனைகள் அதிகரிக்கப்பட்டதுடன், அதிகளவில் இந்த சோதனையை மேற்கொண்டது தமிழகம்தான். நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையாக சிகிச்சைகள் வழங்கப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில், போர்க்கால அடிப்படையில் கொரோனா படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டது.
உலகளவில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவரும் உயிர்காக்கும் உயரிய மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதால் தற்போது தமிழகத்தில் 97% மக்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். உயிரிழப்பு விகிதமும் குறைக்கப்பட்டது. அலோபதி, சித்தா, ஆயுர்வேதா என ஒருங்கிணைந்த மருத்துவமுறையை பின்பற்றிய ஒரே மாநிலமும் தமிழகம்தான்.
பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதால் கொரோனா தாக்கமும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகம் ஒரு முன்மாதிரி மாநிலமாக மாறியுள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து சாதாரண காய்ச்சலுக்குக் கூட சிகிச்சை தர 2000 மினி கிளினிக்குகள் அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில பொருளாதாரமும் மிகப்பெரிய அளவில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி கிடைத்தவுடன், கடைகோடி மக்களுக்கும் இலவசமாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பேரிடர் காலத்தையும் தமிழக அரசு சிறப்பாக கையாண்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் சிறப்பாக கையாளும்’’ என்று பேசியதுடன், முன்கள பணியாளர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தியாகராயர் குழும தலைவர் கருமுத்துக்கண்ணன், ZOHO சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு, KISSFLOW சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம், பிஜிபி குழுமத் தலைவர் பழனி ஜி.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை முழுமையாக காண > புதிய தலைமுறை - பேஸ்புக் இணைந்து நடத்தும் "துளிர்க்கும் நம்பிக்கை"