தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு - முதல்வர் பழனிசாமி விளக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்டது என்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலர் உடன் இருந்தனர்.
முதலமைச்சர் பேசுகையில், “மக்கள் அமைதியான வழியில் தான் போராடி வந்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைக்கு ஆலைக்கு அனுமதி வழங்கவில்லை. ஆலைக்கான மின்சாரத்தையும் துண்டித்துள்ளோம்.
எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சில இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு இத்தகைய போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தில் வன்முறையை கொண்டு வந்துள்ளார்கள். மக்களின் அமைதி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்களுக்கு தீ வைத்தனர். ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வாகனங்களுக்கு தீ வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்குள் நுழைய முற்பட்டனர். காவல்துறையினர் முதலில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முற்பட்டனர். பின்னர் தடியடி நடத்தினர். கடைசியில் வேறு வழியில்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது.
போலீசார் மீது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு நடவடிக்கைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை. தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவம் விரும்பத்தகாதது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர் முயற்சி. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மக்களின் கோரிக்கை தொடர்பாக சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.