நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பட்ஜெட்: முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு
நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பட்ஜெட்டாக, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இருப்பதாக, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பொருளாதாரத்தை அசாதாரண காரணிகள் சூழ்ந்திருக்கும் சவாலான சூழலில் அனைத்து அம்சங்களும் நிறைந்த மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்திருக்கிறார். பட்ஜெட் தாக்கலுக்காக மத்திய அரசு மேற்கொண்ட மூன்று சீர்திருத்தங்களை வரவேற்கிறேன். ஏற்கனவே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பலமுறை வலியுறுத்தியவாறு, திட்டம் மற்றும் திட்டமில்லா ஒதுக்கீடு முறையை திடமான முடிவின் மூலம் முற்றாக கைவிட்டதற்காக, நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை பாராட்டுவதாகவும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
வேளாண்துறையில் இந்தாண்டு ஏற்பட்ட வளர்ச்சியை தனது பட்ஜெட் உரையின் போது குறிப்பிட்ட மத்திய நிதி அமைச்சர், வறட்சியால் பாதித்த தென் மாநிலங்கள் பற்றியோ, அதிலும் குறிப்பாக தமிழகம் பற்றியோ முக்கியவத்தும் அளித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்காக மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்புத் திட்டத்தை வரவேற்பதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
உயர்கல்விக்கு தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இத்தகைய பொதுத்தேர்வுகளை தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது திணிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே உயர்கல்விக்கான மாணவர் தேர்வுமுறை, வெளிப்படையாகவும், சிறப்பான முறையிலும் நடைபெற்று வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.