‘என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்பு கோட்டைதான் கலைஞர் கோட்டம்’- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

தந்தைக்கு தாய் எழுப்பிய அன்பு கோட்டைதான் கலைஞர் கோட்டம் என நெகிழ்ச்சியடைந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் தேர் அழகு என்பதற்கேற்ப கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
கலைஞர் கோட்டம்
கலைஞர் கோட்டம்@CMOTamilnadu

திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 12 கோடி ரூபாய் செலவில், 7 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் ஆழித்தேர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோட்டத்தை, தனது சகோதரி செல்வியுடன் இணைந்து முதலமைச்சர் திறந்துவைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”தந்தைக்கு தாய் எழுப்பிய அன்பு கோட்டைதான் கலைஞர் கோட்டம். திருவாரூர் தேர் அழகு என்பதற்கேற்ப கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திருவாரூர் காரருக்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்கு அங்கு வாழக்கூடிய மக்கள் விழா நடத்த அரங்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதை கட்டி காப்பாற்ற வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். கட்டுவது எளிது; பராமரிப்பது சிரமம்; அதனால் சிரமம் பார்க்காமல் பராமரியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

கலைஞர் மறைந்த பிறகும் அவருடைய வாழ்க்கைக்கு பிறகும் மருத்துவமனையாக. நூலகமாக இது போன்ற ஒரு கட்டிடமாக இருப்பவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர். கலைஞர் தலைமையிலான அரசை தான் நான் நடத்திக் கொண்டிருக்கின்றேன். இந்த திராவிட மாடல்ஆட்சியை கலைஞருக்கு காணிக்கையாக செலுத்திக் கொண்டிருக்கின்றேன். கலைஞர் என்ன முடிவெடுப்பார் என யோசித்து அதைப்போலவே நான் செயல்படுகிறேன்.

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வருவதாக இருந்தது. திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால் வர இயலவில்லை. தொலைபேசியில் வருத்தம் தெரிவித்தார் நிதிஷ்குமார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும், ஆகஸ்ட் 15 கொடியேற்று உரிமையை பெற்று தந்தவர் கலைஞர். இந்திரா காந்தி அம்மையார் தொடங்கி அனைத்து இந்திய பிரதமர்களுடன் நல்லுறவு வைத்துக் கொண்டிருந்தவர் கலைஞர்.

பிரதமரை உருவாக்குவதிலும் கலைஞரின் பங்கு பெரும் பங்காக இருந்தது. அவரால் உருவாக்கப்பட்ட குடியரசுத் தலைவர்கள் அதிகம். இந்திய அரசியலில் மாபெரும் ஆளுமையாக இருந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முதல் ஜனநாயக மாநாடு நடைபெற உள்ளது நானும் பாட்னா செல்கிறேன். ஜனநாயக போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக நானும் பங்கு எடுக்கிறேன். நெருக்கடியான காலத்தில் நாம் இருக்கிறோம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 3000, 4000 ஆண்டுகள் பழமையான தமிழகம் என்ற மாநிலம் இல்லாமல் போய்விடும்.

மீண்டும் பாஜகவை ஆள விடுவது தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் எதிரானது. தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகிறோமோ, அதே போலவே அகில இந்திய அளவில் செயல்பட வேண்டும். தமிழகத்தில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து வெற்றி பெறுவது போல இந்தியாவில் அனைத்து கட்சிகளும் எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும். அதற்கு முன்னோட்டமாக தான் பீகார் மாநிலத்தில் இருந்து கூட்டம் நடைபெற உள்ளது. கலைஞர் கனவுகளின் நிறைவேற்றுவோம்.

நான் மட்டும் கலைஞர் மகன் அல்ல, நீங்கள் அனைவரும் கலைஞரின் பிள்ளைகள் தான். நாற்பதும் நமது, நாடும் நமதே நன்றி வணக்கம்” என்றுக்கூறி தன்னுடைய உரையை முடித்தார். இந்நிகழ்ச்சியில், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com