தொழில் முதலீடுகளை பெறும் வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார்.
லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு பயணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்குகிறார். அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சர் முதலில் லண்டன் செல்கிறார். அங்குள்ள மருத்துவ துறையின் பணித்தரத்தை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனித வள மேம்பாட்டு நிறுவனத்தினரை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதைத் தொடர்ந்து இந்துஜா உள்ளிட்ட பல தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார். செப்டம்பர் 1ஆம் தேதி இரவு லண்டனிலிருந்து புறப்பட்டு 2ஆம் தேதி நியூயார்க் செல்கிறார். அங்கு அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க வாழ் தமிழ் மக்களிடம் கலந்துரையாட உள்ளார்.
அதன்பின்னர் செப்டம்பர் 7ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து புறப்படும் முதல்வர், 8 மற்றும் 9ஆம் தேதிகளில் துபாய்
தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பின்னர் துபாயில் உள்ள தொழில் முனைவோர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் தனியே கூட்டம் நடத்திவிட்டு செப்டம்பர் 10ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் திரும்புகிறார்.