நெல்லை: அனுமதியின்றி இயக்கப்பட்ட 1 to 1 பேருந்து... பயணிகள் இடையேயான மோதலால் கதறி அழுத நடத்துனர்!

நாங்குநேரியில் அரசு பேருந்தில் பயணிகளுக்குள் ஏற்பட்ட மோதலை சமாளிக்க முடியாத ஆத்திரத்தில், போலீசார் முன்னிலையில் தரையில் உருண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார் ஒரு நடத்துனர்
conductor
conductorpt desk

நேற்று திருப்பூரில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு அரசு பேருந்தொன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு அந்த பேருந்து சென்றதும், 1டூ1 எனக் கூறி நாகர்கோவில் செல்லும் பயணிகளை மட்டுமே நடத்துனர் ஏற்றியுள்ளார். அப்போது நாங்குநேரிக்கு செல்லும் சில பயணிகளும் பேருந்தில் ஏறியுள்ளனர். இந்த பஸ் நாங்குநேரிக்கு போகாது என நடத்துனர் கூறயுள்ளார்.

அதற்கு பயணிகள், ‘இது வழக்கமாக நாங்குநேரி ஊருக்குள் வந்து செல்லும் பஸ் தான்’ எனக்கூறி இறங்க மறுத்துள்ளனர். இதையடுத்து வேறு வழியின்றி நாங்குநேரி பயணிகளுக்கும் நடத்துனர் டிக்கெட் கொடுத்துள்ளார். இதனை அடுத்து நாகர்கோவிலுக்கு டிக்கெட் பெற்ற பயணிகள் ‘இது 1டூ1பஸ் தானே? எப்படி இடையில் உள்ள ஊர் பணிகளை ஏற்றலாம்?’ என நடத்துனரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

conductor's action
conductor's actionpt desk

இதனைத் தொடர்ந்து நாங்குநேரி பயணிகளுக்கும் நாகர்கோவில் பயணிகளுக்கும் இடையே பஸ்ஸில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நாங்குநேரி ஊருக்குள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகளை இறக்கி விட்டுள்ளனர். இதனை அடுத்து நாங்குநேரி பயணிகளை நாகர்கோவில் பயணிகள் அவதூறாக பேசியதாக கிடைத்த தகவலின் பேரில் நாங்குநேரி பேருந்து நிலையத்தில் அந்த பஸ்ஸை வழிமறித்த பொதுமக்கள், நாகர்கோவில் பயணிகள் மற்றும் ஓட்டுநர் - நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் வந்தால் 1டூ1 என சட்டவிரோதமாக இயக்குவது வெளியே தெரிந்து விடும் என ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயந்துள்ளனர். இதனால் அவர்கள் காவல் நிலையத்திற்குச் செல்வதை தவிர்த்துள்ளனர். மற்றொருபக்கம், நாங்குநேரி பயணிகளை அவதூறாக பேசிய நாகர்கோவில் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்கு வந்த போலீசாரிடம் நாங்குநேரி மக்கள் தெரிவித்துள்ளனர். பிரச்னை பெரிதானதால், பஸ்ஸை ஓரமாக நிறுத்துவதாகக் கூறிவிட்டு ஓட்டுனர் நாகர்கோவில் நோக்கி பஸ்ஸை ஓட்டிச் சென்றார்.

conductor's action
conductor's actionpt desk

இதையடுத்து போலீசாரும் பொதுமக்களும் பைக்கில் துரத்திச் சென்று அந்த பஸ்ஸை தடுத்து நிறுத்தினர். அப்போது நாங்குநேரி சப் இன்ஸ்பெக்டர் கணபதி, அந்த பஸ்ஸின் நடத்துனர் முத்தையாவிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அதை பொதுமக்கள் சிலர் செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த நடத்துனர், ‘என்னை படம் எடுக்காதீர்’ எனக் கூறி போலீசார் முன்னிலையில் கூச்சலிட்டு தரையில் படுத்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் ஏற்பட்ட படபடப்பில் கலக்கமடைந்த அவர் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டு கூச்சலிட்டார். அப்போது பஸ்ஸில் இருந்த பயணிகள் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவினர்.

பின்னர் நடத்துனர் சற்று நிதானமாகி “அரசின் அனுமதி இல்லாத பேருந்துகள் சில ‘பைபாஸ் ரைடர், 1டூ1’ போன்ற பெயர்களில் செல்கின்றன. அவற்றிலெல்லாம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கச் சொல்லி உயர் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிடுகின்றனர். அப்படி வசூலிக்கும்போது பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இரு தரப்புக்கும் இடையில் நாங்கள் சிக்கி தினமும் நிம்மதியின்றி பணி செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தூக்கி தண்ணீர் கொடுத்து சமாதானப்படுத்தினார். அதன்பின் பஸ்ஸில் ரகளையில் ஈடுபட்ட நாகர்கோவில் பயணிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி தகராறில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தினார்.

conductor's action
conductor's actionpt desk

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனுமதி இல்லாமல் ‘1டூ1, பைபாஸ் ரைடர்’ போன்ற பெயர்களில் இயக்கப்படும் இப்படியான பேருந்துகளில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களால் பொதுமக்கள் பாதிப்படைவதோடு, அடிக்கடி மோதலும் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் உருவாகி வருகிறது. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் மன அழுத்தத்தால் நிம்மதியின்றி பணி செய்து வருவதாக புலம்புகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com