
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை திமுக கட்சி அமைப்பு போல தமிழக அரசு பயன்படுத்துவதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த பின் அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதாக விமர்சித்துள்ளார்.
திமுகவின் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புகள் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வாயிலாக வெளியாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக நிகழ்ச்சிகளை, செய்தி மக்கள் தொடர்புத்துறை காட்சிப்படுத்த வேண்டும், அத்துறை ஊழியர்கள் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 14ஆம் தேதி திமுக நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியதால் அரசு ஊழியர்கள், அதிருப்தி அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் ஒழிப்பு குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்ததால், அதிலிருந்து அவரை காக்க தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 பக்க அறிக்கையை வெளியிட்டதாக கூறியுள்ள அண்ணாமலை, சனாதன தர்மத்தை ஒழிப்பதுதான் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என கோரியுள்ளார்.
கட்சி அறிவிப்புகளுக்கும், அரசின் அறிவிப்புகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, திமுக அரசு செயல்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.