தொடங்கியவுடனே ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை.. என்ன காரணம்?
தமிழ்நாடு 2025 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. தொடக்கத்திலேயே தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதையடுத்து அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 7) காலை 9.30 மணியளவில் துவங்கியது.
அப்போது, 2004-14 ஆண்டு வரை இந்திய பிரதமராகப் பொறுப்பு வகித்த மன்மோகன் சிங், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்துநின்று மரியாதையும் செலுத்தினர்.
இந்தநிலையில், மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பேரவையின் இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
மேலும், இந்த கூட்டத் தொடருக்கு நேற்று போலவே, இன்றும் அதிமுகவினர், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த சார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, "யார் அந்த சார்?" என்ற வாசகத்துடனான பேட்ஜை அணிந்து வந்திருந்தனர்.