ஆளுநர் உரை | ”பாஜகவுக்கும் தவெகவுக்கும் மறைமுக உறவு” - எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுவது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தவெக ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், அக்கட்சி தலைமையிலான தமிழக அரசின் முழுமையான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியிருக்கிறது. முந்தைய திமுக அரசில், சட்டப்பேரவையில் கடந்த 3 ஆண்டுகளாக, அப்போதைய ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி முதலில் தேசியகீதம் பாடப்படாமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தார். இதையடுத்து, அவரது உரையை அப்போதைய சபாநாயகர் அப்பாவு வாசித்து அவைக்குறிப்பில் பதிவு செய்திருந்தார். அதேபோல, 2023-ம் ஆண்டு சட்டப்பேரவையின் போது, மத்திய அரசுக்கு எதிரான அரசின் குறிப்புகளை நீக்கி விட்டு ஆர்.என்.ரவி உரையாற்றியிருந்தது அப்போது பேசுபொருளாகியிருந்தது.
இந்தசூழலில் தான், தவெக தலைமையிலான அரசும் சட்டப்பேரவையில் இதுவரை பின்பற்றபட்ட மரபுகளே தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்படும்போது, ஆளுநர் அர்லேகர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றாமல் வெளிநடப்பு செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்தநிலையில், இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை தொடங்கியபோதும், ஆளுநர் தனது உரையாற்றியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அரசின் குறிப்புகளில் சிறிதளவும் மாற்றாமின்றி மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களையும் அப்படியே உரையாற்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கபடுகிறது.
இந்தநிலையில், ஆளுநர் உரை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்துப் பார்க்கலாம்.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்ததற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,
ஆளுநர் உரை என்பது, ஆளுநரின் தனிப்பட்ட உரை கிடையாது. அது அரசு தயாரித்துக் கொடுக்கக் கூடிய உரை. ஆட்சியாளர்கள் தங்கள் அளித்த கோரிக்கைகளை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பது குறித்து தான் இருக்கும். ஆனால், இன்றைய ஆளுநர் ஆளுங்கட்சியினர், ரீல்ஸ் போடுவதற்கான கண்டெண்டாக தான் உள்ளது. திமுக ஆட்சியில் அரசு எழுதி கொடுத்த எந்த உரையையும் ஆளுநர் படித்தது இல்லை. அதில், பல திருத்தங்களை மேற்கொள்வார். ஆனால், இன்று ஒரு வரி கூட விடாமல் படித்திருக்கிறார். இதன்மூலமே, தவெகவுக்கும் பாஜகவும் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.
அதேபோல, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, இருமொழிக் கொள்கை போன்ற எங்கள் அரசின் திட்டங்களையே மீண்டும் அறிவித்துள்ளனர். மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடனே ஆளுநர் உரை அமைந்துள்ளது. சென்ற அரசினுடைய நிர்வாகம் சரியில்லை என சில இடங்களில் கூறியிருக்கின்றனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த ஆட்சி அமைந்து 1 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்த அரசு வெறும் ஸ்டிக்கர் அரசாக தான் செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு திட்டங்களை சொல்லியிருக்கிறார்கள். அந்த அறிவிப்புகளை எந்தக் காலத்தில் நிறைவேற்றப்போகிறார்கள் என்பது குறித்து ஆளுநர் உரையில் இடம்பெறும் என நினைத்தோம். ஆனால் ஏமாற்றம் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மாற்றங்களை கொண்டு வருவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக. மாற்றங்களை எவ்வாறு கொண்டு வருவார்கள் என கூறுவார்கள் என எதிர்பார்த்தோம். எதிர்பார்த்த அளவுக்கு ஆளுநர் உரையில் திட்டங்கள், அறிவிப்புகள் இல்லை. நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையில் இருந்ததுதான் ஆளுநர் உரையில் உள்ளது எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, அவரது மகன் மிதுன் அரசியலுக்கு வருவார் என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து விளக்கமளித்த அவர், ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்; இது குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

