அசாமில் இறந்த தமிழக ராணுவ வீரர்: சொந்த ஊருக்கு உடலை கொண்டு வரமுடியாத சோகம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு மற்றும் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அசாமில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பேருஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (38). இவர் அஸாம் ரைபில் பிரிவில் ரைபில் மேனாக கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு நதியா என்கிற மனைவியும், மனிஷா, விசுவமித்திரன் என்கிற இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அஸாம் ரைபிளில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது குமரேசன் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரேசன் கடந்த 22 ஆம் தேதி காலை 05.20 மணிக்கு உயிரிழந்து விட்டதாக அசாம் ரைபிள் பிரிவில் இருந்து தகவல் வந்துள்ளது.
குமரேசன் உயிரிழந்த செய்தி வந்ததில் இருந்தே பேருஹள்ளி கிராமத்தில் சோகம் நிலவி வருகிறது. கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதிலும் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு நிலவி வரும் நிலையில் விமானம் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. விமான சேவை நிறுத்தப்பட்டதால் அசாம் மாநிலத்திலிருந்து உடலை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக இன்று வந்துவிடும் நாளை வந்துவிடும் என உடலை எதிர்பார்த்து உறவினர்கள் கதறி வருவது அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு தலையிட்டு உடலை உடனடியாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.