தமிழ்நாடு
மக்களை துரத்துவதும் வெளியேற்றுவதும் அநாகரிக அரசின் அடையாளம் - டி.கே.எஸ் இளங்கோவன் காட்டம்
மக்களை துரத்துவதும் வெளியேற்றுவதும் அநாகரிக அரசின் அடையாளம் - டி.கே.எஸ் இளங்கோவன் காட்டம்
மதுரை கூடல்நகர் பகுதியில் உள்ள சகாயமாதா ஆலய வளாகத்தில் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு மற்றும் சனநாயக அமைப்புகள் சார்பில் இந்திய அரசியல் சட்ட பாதுகாப்பு கூடுகை நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ் இளங்கோவன், சு.வெங்கடேசன், மற்றும் தமிழ்நாடு ஆயர்பேரவை தலைவர் பேராயர் அந்தோணி பாப்புசாமி மற்றும் அனைத்து கிறிஸ்துவ அமைப்பினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவை குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், “ஒரு நாடு பொருளாதார நிலையிலும், வேலையில்லா திண்டாட்டத்தாலும், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ரிசர்வ் வங்கியிடம் கடன் கேட்கும் நிலையில் உழன்று கொண்டிருக்கும் சூழலில், அரசாங்கம் யாரை நாட்டை விட்டு துரத்தலாம் என கணக்குப் போட்டு கொண்டிருக்கிறது. ஒரு நாகரிக அரசின் கடமை என்பது சமூக பொருளாதார பாதுகாப்பு வழங்குவது. அரசு என்பது மக்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடக்கூடாது. உணவு உடை இருப்பிடம், மருத்துவம் வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு. அதை விட்டுவிட்டு மக்களை துரத்துவது வெளியேற்றுவது அநாகரீக அரசின் அடையாளம்.
இந்திய முஸ்லீம்கள், இந்தியர்களாக வாழவும், சாகவும் நினைப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. இந்திய முஸ்லீம்களின் இந்தியர் என்கிற உணர்வை மத்திய அரசு முறியடிக்க, தட்டிப்பறிக்க நினைக்கிறது. ஒட்டுமொத்த இஸ்லாமியர்களை புறக்கணித்துவிட்டு இந்தியாவை இந்து நாடாக்க மத்திய அரசு முயன்று வருகிறது. நபிகளும், இயேசுநாதரும் வந்த பிறகு தான் ஒரு கடவுள் தத்துவம் வந்தது.
ஆனால் இந்தியாவில் பல கடவுளும், வர்ணாசிரம கொள்கையும் இருந்தது. அக்கொள்கையே நம்மை சாதி மதம் இனம் என பிரித்தது.
சமஸ்கிருதமோ வேறு எந்த மொழியுமே பெண்களுக்குச் சம உரிமை கொடுத்ததில்லை. ஆனால் தமிழ்மொழி பெண் சமத்துவத்தை வலியுறுத்தியது.
இப்போது இருக்கிற அரசிடம் வள்ளுவர் யார் என்று கேட்டால் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லும். அந்தக்காலத்தில் சாதி பார்த்து திருவள்ளுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அறிவையும், சிந்தனையையும் பார்த்தே ஏற்றுக்கொண்டார்கள். உலகமே ஏற்றுக்கொள்கிற பொதுமறையைத் தந்தவர் வள்ளுவர்.
சிஏஏ என்பது தொடக்கம். இன்னும் பல ஆபத்துக்களை எதிர்நோக்க உள்ளோம். இந்த விஷ சந்துகளை அழிக்க வேண்டும். இவர்களை இங்கிருந்து நீக்காவிட்டால் நாம் நீங்கிவிடுவோம்" என பேசினார்.
தொடர்ந்து, நிகழ்வை முன்னெடுத்த மதுரை உயர்மறைமாவட்ட ஆயர் அந்தோணி பாப்புசாமி, “இந்த நிகழ்வின் நோக்கம், அரசியலமைப்பின் அடிப்படையில் மத, இன அடிப்படையில் பாகுபாடற்ற நிலையை உறுதி செய்ய வேண்டும், நீதி, நிர்வாகம்,
சட்டத்துறைகளில் மதச்சாயமும், காவிச்சாயமும் இருக்கக்கூடாது. அரசியல் சாசனம் உணர்த்தும் சமத்துவம் வேண்டும். நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே” என குறிப்பிட்டார்.