“கொரோனாவில் அரசியல் செய்வது அதிமுகதான்” - டி.கே.எஸ்.இளங்கோவன்
கொரோனா விவகாரத்தில் திமுக அரசியல் செய்யவில்லை, அதிமுக தான் அரசியல் செய்கிறது என திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தையும், அதன்மூலம் அரசிடம் கொடுக்கப்பட்ட மனுக்களையும் விமர்சித்து அமைச்சர் காமராஜ் பேசியிருந்தார். அமைச்சரின் பேச்சுக்குச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பதிலளித்துப் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், தமிழகத்தில் அரசின் உதவி கிடைக்காத மக்களுக்கு உதவி செய்யவே திமுக ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தைத் தொடங்கியதாகத் தெரிவித்தார். அரசு செய்ய வேண்டிய சேவையை திமுக செய்ததாகவும், இதனைப் பாராட்ட வேண்டிய அரசு, பாராட்டாமல் விமர்சிப்பதாகக் கூறினார்.
எல்லா பெருமைகளும் திமுகவிற்கு வந்துவிடும் என்பதற்காக அரசு திமுகவை விமர்சிப்பதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் பொது முடக்கத்தால் 2 கோடி பேர் வருவாய் இழந்திருப்பதாகக் கூறிய அவர், அவர்களுக்கு அரசு முறையாக உதவவில்லை எனக் குறைகூறினார். அத்துடன் கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஆரம்பம் முதலே அதிமுக அரசியல் செய்து வருவதாகவும், இதில் திமுக எந்த அரசியலும் செய்யவில்லை எனவும் கூறினார்.
பொது முடக்க நேரத்தில் அம்மா உணவகத்தில் அதிமுகவினர் உணவு வழங்குவதாக அறிவித்தார்கள். அரசு பணத்தில் எப்படி ஒரு கட்சி உணவு வழங்க முடியும் என்றார். அப்படியென்றால் அனைத்துக் கட்சிகளையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறினார். மக்கள் பணியாற்றுவதில் அதிகாரிகள் சரியாக இருக்க நினைத்தாலும், ஆளுங்கட்சியினர் விடுவதில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், அரசு மதுபானக் கடைகளை மூடினால் திமுகவினர் தானாக மூடப்போகிறார்கள் என்றார்.