“பாஜக கங்கை நதிதான்... எதையும் புனிதமாக மாற்றும் சக்தி எங்களுக்கு உண்டு”- வானதி சீனிவாசன்!
நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “இன்று டெல்லியில் 36 கட்சி கூட்டணி அமைத்திருக்கிறார்களே (NDA-வை குறிப்பிட்டு)... இதுல 37வது பெரிய கட்சியாக அமலாக்கத் துறையையும் சேர்த்து தேர்தலிலே வெற்றிபெறலாம் என்ற எண்ணத்திலே இதை (அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்ததை குறிப்பிட்டு) செய்கிறார்கள்.
பாஜகவை நான் கங்கை நதியோடு ஒப்பிடுகிறேன். கங்கையிலே யாராவது மூழ்கினால் ‘அவர்கள் புனிதமடைந்து விடுவார்கள், அவர்களின் பாவங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்’ என்று சொல்வார்கள். அதைப்போல பாஜகவிலே யாராவது சேர்ந்துவிட்டால் அவர்களது பாவங்கள் எல்லாம் தீர்ந்துவிடும். அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து விடுவார்கள். அவர்களை உத்தமர் என்ற சொல்வார்கள். பாஜக ஊழலற்ற கட்சி என்று சொல்வார்கள். கங்கையிலே எவ்வளவு அழுக்கு இருக்கிறதோ, அவ்வளவு அழுக்கு பாஜகவிலே இருக்கிறது” என்றார் கடுமையாக.
இந்நிலையில் டி.கே.எஸ்.இளங்கோவனின் பேச்சுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், “இதற்கு முன் பாஜக-வை வாஷிங் மெஷின் என்றனர். இப்போது புனிதமான கங்கை நதி என்கிறார்கள். ஆக மொத்தம் கங்கை நதி புனிதம் என்று அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். அதற்காக முதலில் நான் சந்தோஷப்படுகிறேன்.
பாஜகவை வாஷிங் மெஷின் என்று சொன்னால், ஆமாம் நாங்கள் வாஷிங் மெஷின் தான். எங்களிடம் வந்தவர்களை தூய்மையாக மாற்றிவிடுவோம். பாஜக கங்கை நதி என்று சொன்னால், ஆமாம் நாங்கள் கங்கை நதி தான். எங்களிடம் வந்தால் எல்லாவற்றையும் புனிதமாக மாற்றக்கூடிய சக்தி எங்கள் கட்சிக்கு இருக்கு.
ஏனெனில் இந்தக் கட்சி, நேர்மையின் அடிப்படையில், அறத்தின் அடிப்படையில், சட்டத்தின் அடிப்படையில் நடக்கக் கூடியது. அதனால் எங்களிடம் யார் வந்தாலும் அவர்கள் நல்லவர்களாக மாறிவிடுவர்” என்றார்.