திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா?

திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா?
திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா?

காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டாலும் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருவாரூரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே பரபரப்பு நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் யாரை வேட்பாளர்களாக அறிவிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு மேலோங்கிய நிலையில் ஒருபுறம் தேர்தலை நடத்தக்கூடாது என்றும் குரல் எழுந்தது. கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த முறையீட்டை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, இதே கோரிக்கையை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மாரிமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அம்மனுக்களை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுக்கவுள்ளது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரணப் பணிகளை தொடரலாம் எனத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. மேலும் கூறிய தேர்தல் ஆணையம் நிவாரணப் பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்கக் கூடாது, தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. அதேவேளையில் டி.ராஜாவின் மனுவையும் கவனத்தில் கொண்டு திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டார்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூருக்கு தற்போது நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்குமென பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், திருவாரூரில் தேர்தலை நடத்துவது குறித்து அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டது. இதுதொடர்பாக திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கட்சிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுக, திமுக, சிபிஎம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட கஜா புயல் நிவாரணப் பணிகள் நிறைவடைந்த பிறகு இடைத்தேர்தலை நடத்தலாம் என அதிமுக, திமுக, சிபிஎம் கட்சிகள் வலியுறுத்தின. இது குறித்து பேசிய டிடிவி தினகரன் மக்களை சந்திக்க அரசியல் கட்சிகள் அச்சப்பட்டு இடைத்தேர்தல் வேண்டாம் என்கின்றன. இதனை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலை நடத்தலாமா, வேண்டாமா என்பது பற்றி அறிக்கையை அம்மாவட்ட தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். தேர்தலை ஒத்திவைக்க அனைத்துக்கட்சி கோரியுள்ள நிலையில் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com