தி.மலை: செங்கம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பெங்களூரு நோக்கிச் சென்ற கார், முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியில் புறவழிச் சாலையில் இன்று காலை 9 மணி அளவில் சிங்காரப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல், மேல்மருவத்தூர் சென்று விட்டு சொந்த ஊரான பெங்களூரு நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது தனக்கு முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முற்படும்போது எதிரில் வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் நான்கு ஆண்கள் ஒரு பெண் என மொத்தம் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒரு பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார் அவரை தேடும் பணிகள் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் இறந்தவர்களின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இறந்தவர்கள் பெங்களூரைச் சேர்ந்த மணிகண்டன், சதீஷ்குமார், சின்னப்பா, ஹேமநாதன், மலர் மற்றும் சிறுவர்களான சர்வேஸ்வரன், சித்தார்த் ஆகிய ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காவியா என்ற பெண் மட்டும் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து செங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com