திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்: வெளியூர் பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்: வெளியூர் பக்தர்களுக்கு தடை
திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்: வெளியூர் பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை மலை உச்சியில் நாளை மாலை மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயில் நடைதிறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளது. அதிகாலை 4 மணியளவில் அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்பட உள்ளது.

அதைத் தொடர்ந்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வர். பின்னர் மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அப்போது, சாமி சன்னதி முன்பு அகண்ட தீபமும், அதேநேரத்தில் மலைஉச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, தீபத் திருவிழாவிற்கு வெளியூர் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் திங்கள்கிழமை வரை 3 நாள்களும் திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வருவதற்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை நகருக்குள் பக்தர்கள் வருவதை கண்காணிக்கும் விதமாக நகரின் எல்லை பகுதியில் 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com