“நாங்கள் சிறுக சிறுக சேமித்த பணம் செல்லாதா..?” பேரன், பேத்திக்காக ரூ.46,000 பணத்தோடு வேதனையில் பாட்டிகள்..!
பேரன் பேத்திகளுக்காக செல்லாத ரூ.500, 1000 நோட்டுகளை திருப்பூர் பாட்டிகள் இருவர் சேர்த்து வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பூமலூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள் (75) தங்கம்மாள் (78) . இருவரும் தங்களது கணவர்கள் இறந்த நிலையில் மகன்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையில் இவர்களது மகன்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று வந்தனர்.
மேல் சிகிச்சைக்கு பணம் தேவை என்ற நிலையில், மகன்களிடம் பணம் இல்லாததால் தங்களது தாயாரிடம் பணம் இருக்கிறதா என கேட்டபோது, நிறைய வைத்துள்ளோம் என இருவரும் கூறி பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து தங்களது மகன்களிடம் கொடுத்துள்ளனர்.
ரங்கம்மாள் தான் சேர்த்து வைத்திருந்த 24 ஆயிரம் ரூபாயையும் தங்கம்மாள் 22 ஆயிரம் ரூபாயையும் கொடுத்துள்ளார். இந்த பணத்தை பார்த்த மகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் . இந்த பணம் செல்லாது என மகன்கள் தெரிவித்ததால் மூதாட்டிகள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பணம் செல்லாது என்ற விபரம் தங்களுக்கு தெரியாது எனவும் வேதனை அடைந்துள்ளனர். மகன்கள் மற்றும் பேரன் பேத்திகளுக்கு தருவதற்காக சிறிது சிறிதாக பல ஆண்டுகளாக சேர்த்து வைத்த பணம் தற்போது செல்லாது என தெரிந்ததால் மூதாட்டிகள் மட்டுமல்லாது குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா