திருப்பூர்: அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் மனிதக் கழிவை வீசிச் சென்ற மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை
செய்தியாளர்: சுரேஷ் குமார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள நிலையில், சுமார் 200 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வகுப்பறைகளை பூட்டிவிட்டுச் சென்ற ஆசிரியர்கள் இன்று காலை வகுப்பறைகளை திறந்துள்ளனர்.
அப்போது பத்தாவது வகுப்பறையில் சுவர் மற்றும் பள்ளி மாணவர்கள் அமரும் இருக்கைகள் முழுவதும் மனிதக் கழிவுகள் வீசப்பட்டிருந்தது. இதையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் உடனடியாக காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான காமநாயக்கன்பாளையம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து மனிதக் கழிவுகளை வீசியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது... "பள்ளியில் பயிலும் மாணவர்களே இச்செயலில் ஈடுபட்டார்களா அல்லது மர்ம நபர்கள் இச்செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.