திருப்பூர்: காதர்பேட்டை பனியன் சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 50 கடைகள் எரிந்து நாசம்

திருப்பூர் காதர் பேட்டை பனியன் சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பை ஆய்வு செய்து இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சியின் மையப்பகுதியான ராயபுரம் பகுதியில் காதர் பேட்டை எனப்படும் பனியன் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறியது முதல் பெரியது வரையிலான பின்னலாடை துணிகள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வழக்கம்போல் கடைகள் அனைத்தும் 9 மணிக்குள்ளாக பூட்டப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் பனியன் பஜாரில் தீ எரிவதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்ததையடுத்து திருப்பூர் வடக்கு, தெற்கு , அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஆகியோர் தீயணைப்பு பணிகளை தீவிரபடுத்தினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பேசியபோது... "காதர்பேட்டை பகுதியில் 50 கடைகளுக்கும் மேலாக தீ விபத்தில் சேதமடைந்துள்ளது. சேதம் மதிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும். ஆய்வுக்குப் பின் இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்" என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com