திருப்பூர்: பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
காங்கேயம் ஓலப்பாளையம் அருகே பழுதான லாரி மீது கார் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
சிங்காநல்லூர் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (39). அவர் தனது மனைவி இந்து (37). இந்துவின் தாயார் கௌசல்யா மற்றும் தனது குழந்தைகளுடன் இன்று காலை தஞ்சாவூருக்கு தனது காரில் சென்றுள்ளார்.
அப்போது காங்கேயம் அடுத்த ஓலப்பாளையம் சாலையில் வரும் போது, பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்பகுதியில் கார் மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் லாரியின் அடியில் சென்று விட்டது. இதில், மயில்சாமி அவரது மனைவி இந்து, இந்துவின் தாயார் கொளசல்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த கலைவாணி (46), கொளதம் (13), ரம்யா (11) ஆகிய மூன்று பேரும் காங்கேயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழுதாகி நின்ற லாரி சரியான எச்சரிக்கை கொடுக்காமலும், எச்சரிக்கைக்கு ரிஃப்ளெக்ட் லைட் பயன்படுத்தாதுமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. பழுதாகி நிற்கும் வாகனங்கள் குறிப்பாக இரவு நேரங்களில் சரியான எச்சரிக்கையை கொடுக்க வேண்டுமென காவலர்கள் தெரிவித்துள்ளனர்.