கவனத்தை திருப்பி திருடும் கும்பல் - சிக்கியது எப்படி ?
திருப்பூரில் மக்கள் கவனத்தை திசை திருப்பி திருடும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூரில் மக்களின் கவனத்தை திசை திருப்பி திருடும் குற்றச்செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு புகார்கள் குவிந்தன. குறிப்பாக வெளியூரிலிருந்து காரில் வரும் குடும்பத்தினரிடம் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடத்தப்பட்டன. திருப்பூர் பெருமாள் கோவிலுக்கு காரில் வந்த தம்பதியினரின் கவனத்தை திசை திருப்பி, அவர்களிடம் இருந்து 15 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. அதே பாணியில் ஈஸ்வரன் கோவில் பகுதியில் செந்தில் என்பவரிடமிருந்து ரூ.1.68 லட்சம் திருடப்பட்டது. தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த நாகாத்தாள் என்ற மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி 7 சவரன் பறித்துச் செல்லப்பட்டது.
இந்த சம்பவங்களை எல்லாம் செய்தது, ஒரே கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில், திருப்பூர் சிடிசி சாலையில் தனிப்படை காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பொது மக்களின் கவனத்தை திசைதிருப்பி கொள்ளையடிக்கும் கிரிநாதன்., பிரசாத், அஷார் அலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 சவரன் நகை மற்றும் ரூ.1.68 பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.