திருப்பூர்: இளம் பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்
மூலனூர் அருகே திருமணமான 10-வது மாதத்தில் இளம் பட்டதாரி பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மார்க்கம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் திருமான் (45). இவரது மகள் நித்தியா (21). பிஎஸ்சி படித்துள்ள இவருக்கும் மூலனூர் காதல் கோட்டையில் வசிக்கும் ராமலிங்கம் என்பவரின் மகன் நவீன் குமார் (29) என்பவருக்கும் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
இவர்கள் மூலனூர் காதல் கோட்டை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலையில் வேலைக்கு சென்று விட்டு உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த நவீன் குமார் தனது மனைவி நித்தியா வீட்டின் விட்டத்தில் தூக்கு மாட்டி தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் நித்தியாவை மீட்டு மூலனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல்சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு நித்தியாவின் உடலை கொண்டு சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நித்தியா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக திருமான் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் நித்தியாவின் அப்பா.
புகாரின் பேரில் தாராபுரம் துணை கண்காணிப்பாளர் ஜெயராமன் உத்தரவின்படி மூலனூர் ஆய்வாளர் திருவானத்தம், உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

