திருப்பூர்: அமராவதி ஆற்றுப் பகுதியில் முதலைகள் நடமாட்டம் - அச்சத்தில் பொதுமக்கள்
செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் கல்லாபுரம், ருத்ராபாளையம், குமரலிங்கம், கொழுமம், சர்க்கார், கண்ணாடிப்புத்தூர், மடத்துக்குளம், கணியூர், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில், முதலைகள் நடமாட்டம் இருப்பதாகவும், அதைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அமராவதி அணையில் இருந்து குட்டிகளாக தப்பி வரும் முதலைகள் ஆற்றின் கரையோர பகுதிகளில் தஞ்சம் அடைந்து தற்பொழுது இனப்பெருக்கம் செய்து பெருமளவில் உருவெடுத்துள்ளன என சொல்லப்படுகிறது.
இதனால் ஆற்றுப் பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு மடத்துக்குளம் பேரூராட்சி சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் பகுதியில், பேரூராட்சிக்கு தண்ணீர் சேகரிக்க பயன்படுத்தப்படும் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது 14 அடி நீளமுள்ள முதலை ஒன்று படுத்து ஓய்வு எடுக்கும் வீடியோ வைரலாக பரவியது. இதனால் இப்பகுதி முதலைப் பகுதி என அடையாளம் சொல்லும் அளவிற்கு பிரபலமாகியுள்ளது.
இதையடுத்து அமராவதி, ஆற்றங்கரை, பெருமாள்புதூர் பகுதியில் இரண்டு முதலைகள் உள்ளதாகவும் அதனை வனத்துறையினர் உடனடியாக பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆற்றின் கரையோர பகுதியில் சுமார் 6 அடி நீள முதலை ஒன்று படுத்திருக்கும் வீடியோவை விவசாயி ஒருவர் எடுத்துள்ளார். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அமராவதி ஆற்றங்கரை பகுதிகளில் நடமாடும் முதலைகளை உயிர் சேதம் ஏற்படும் முன் வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.