திருப்பூர்: விளையாடச் சென்ற அக்காள், தம்பி பாறைக்குழி நீரில் மூழ்கிய சோகம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாறைக்குழி அருகே விளையாடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கினர். சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சிறுவனை தேடும்பணி தொடர்கிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி லட்சுமி. திருச்சியை சேர்ந்த இவர், பள்ளிபாளையத்தில் வாடகைக்கு குடோன் எடுத்து விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு சங்கவி (11) என்ற மகளும் சாந்தனு (8) என்ற மகனும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டின் அருகில் உள்ள பாறைக்குழிக்கு அடிக்கடி இருவரும் சென்று விளையாடும் பழக்கம் உள்ளதாக தெரிகின்றது. அதேபோல் இன்று விளையாடச் சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அதனைத்தொடர்ந்து அவர்களது பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்தபோது இருவரையும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அருகில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து பாறைக்குழியில் இறங்கி தண்ணீரில் தேடிப்பார்த்த போது சங்கவியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சாந்தனுவை தேடிப் பார்த்தனர். ஆழம் அதிகம் என்பதால் சாந்தனுவின் உடல் கிடைக்கவில்லை. அதனைத்தொடர்ந்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்றுமணி நேரமாக சிறுவனின் உடலை தேடி வந்தனர்.
இரவு நேரம் என்பதால் தேடல் பணியில் சிக்கல் இருப்பதால் காலை மீண்டும் தேடும் பணி ஆரம்பிக்கப்படும் என தீயணைப்பு துறையினர் கூறினர். பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ், மங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.