திருப்பூர்: போதையில் காவல் நிலையத்தில் ரகளை செய்த நபர் - வைரல் வீடியோ
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மது போதை தலைக்கேறியதால் காவல் நிலையம் சென்று அட்டகாசம் செய்யும் போதை ஆசாமியின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மது போதை தலைக்கேறியதால் காவல் நிலையம் சென்று அட்டகாசம் செய்த போதை ஆசாமியியை போலீசார், காவல் நிலையத்திலிருந்து வெளியே கைத்தாங்கலாக பிடித்து காவல் நிலையத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டனர். ஆனால் காவல் நிலையத்தை விட்டு செல்ல மறுத்த அவர், காவல் நிலையத்தின் முன்பு நின்று ரோட்டில் கிடந்த கற்களை எடுத்து சரமாரி காவலர்கள் மீதும் காவல் நிலையத்தின் மீதும் எறிந்தார்.
இதையடுத்து போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசிய அவரை என்ன செய்வதென்று தெரியாத தாராபுரம் காவல்நிலைய போலீசார் காவல் நிலையத்தின் முன் கேட்டை மூடிக்கொண்டனர். காவல் நிலையத்தில் உள்ளிருந்து போலீசார் ஒருவர் 'ஜெயிலுக்கு போயிருவ, இங்கிருந்து போய்விடு' எனக் கூற, மதுபோதை ஆசாமி, நடிகர் வடிவேல் பாணியில் 'நான் போவேன், இல்லைனா இங்கேயே மல்லாக்கா பாய் விரித்து படுத்துக்குவேன், நீ போயா முதலில்' எனக்கூறி போலீசாரிடம் மல்லுக்கட்டிய நிலையில் குடி போதை ஆசாமியை, சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
மதுபோதையில் இருந்த நபரை போலீசார் விசாரிக்க முயன்றபோது, கொச்சை வார்த்தையில் பேசியதால் அருகில் இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. குடிபோதை ஆசாமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.