திருப்பூர்: பள்ளி வேனில் வந்த அக்காவை அழைக்க சென்ற 3 வயது தம்பிக்கு நேர்ந்த பரிதாபம்
செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆட்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியம் - அஞ்சுளா தேவி தம்பதியர். இந்த தம்பதியினருக்கு தியா (6) என்ற பெண் குழந்தையும், ஆதிஸ்வரன் என்ற மூன்று வயது மகனும் உள்ளனர். இவர்களில் தியா அலங்கியம் சாலையில் உள்ள சிபிஎஸ்சி பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்குச் சென்ற தியா, பள்ளி வேனில் வந்து வீட்டின் முன்பு இறங்கியுள்ளார். அப்போது தியாவின் தம்பி ஆதிஸ்வரன், அக்கா என்று அழைத்துக் கொண்டே வாகனத்தின் முன்பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் ஆதிஸ்வரன் மீது பள்ளி வாகனம் மோதியுள்ளது. இதில் ஆதிஸ்வரன் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுவனை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ஆதிஸ்வரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைகூடத்திற்கு மாற்றப்பட்டது. விபத்து குறித்து தாராபுரம் போலீசார் தனியார் பள்ளி வேன் ஓட்டுநரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.