திருப்பத்தூர்: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - ஆய்வில் வெளிவந்த உண்மை

திருப்பத்தூர்: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - ஆய்வில் வெளிவந்த உண்மை

திருப்பத்தூர்: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - ஆய்வில் வெளிவந்த உண்மை
Published on

வாணியம்பாடியை அடுத்துள்ள ஆலங்காயம் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு 3 வட்டார வளர்ச்சி (பிடிஒ-க்கள்) அலுவலர்கள் உட்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெக்னாமலையை அடுத்துள்ள புருஷோத்தமன் குப்பம் கிராமத்தில் கடந்த ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலை பெய்த கனமழையில் குடிசை வீட்டில் வசித்து வந்த அய்யம்மாள் (60) என்பவர் மண் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். அவருக்கு, பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஊராட்சி செயலாளர் அந்த நிதியை கையாடல் செய்துவிட்டதாக புகார் எழுந்தது. அவர் வீடு கட்டியிருந்தால் உயிரிழந்திருக்க மாட்டார் என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஆலங்காயம் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் 2017-18 ஆம் ஆண்டுகளில் பயனாளிகளின் பட்டியலின் அடிப்படையில் நெக்னாமலை, கிரிசமுத்திரம், வளையாம்பட்டு, மதனஞ்சேரி, பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத், தேவஸ்தானம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் விசாரணை நடத்தினர். அப்போது, சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த அய்யம்மாள் உட்பட 23 பேருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அரசின் ஆவணங்களில் இருந்தது. ஆனால், பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு சென்று சேரவில்லை என்பதையும் கண்டுபிடித்தனர்.

இந்தத் திட்டத்தில் தகுதி இல்லாத நபர்களை சேர்த்து பெரியளவில் நிதி முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தனர். சுமார் 23 பயனாளிகள் தரப்பில் இருந்து மட்டும் ரூ.35 லட்சத்து 31 ஆயிரத்து 517 தொகையை இவர்கள் கூட்டாக முறைகேடு செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து ஆதாரங்களின் அடிப்படையில் ஆலங்காயம் கிராம ஊராட்சிகளின் பிடிஓ-க்களாக பணியாற்றிய ரமேஷ்குமார் (தற்போது வேலூர் மாவட்ட தணிக்கை பிரிவு உதவி இயக்குநர்), வசந்தி (தற்போது திருப்பத்தூர் பிடிஓ), வின்சென்ட் ரமேஷ் பாபு (தற்போது வேலூர் பிடிஓ), ஆலங்காயத்தில் மண்டல துணை பிடிஓ-வாக பணியாற்றிய அருண்பிரசாத், தலைமையிடத்து துணை பிடிஓவாக பணியாற்றிய ரமேஷ்பாபு, தலைமையிடத்து துணை பிடிஓ (தணிக்கை) சீனிவாசன், ஓவர்சீயர்கள் அழகுராசு (56), ஞானபிரசாத் (39), தாமரைசெல்வன் (52), உதவி பொறியாளர் கார்த்திகேயன் (46), பஞ்சாயத்து செயலாளர்கள் வஜ்ஜிரவேல் (ஆலங்காயம்), சுரேந்திரன் (பள்ளிப்பட்டு), எம்.எஸ்.முரளி (தேவஸ்தானம்), ராஜேந்திரன் (ஜாப்ராபாத்), கணபதி (செட்டியப்பனூர்), பூபாலன் (கிரிசமுத்திரம்), பாண்டியன் (மதனஞ்சேரி), சிவா (வளையாம்பட்டு) உள்ளிட்ட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com