திருப்பத்தூர் | மதுபான பாரை அகற்றக் கோரி போராடிய விசிக, பாஜகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர் பகுதியில் உள்ள ஆம்பூர் - பேர்ணாம்பட் புறவழிச்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணிக்கின்றனர், இந்நிலையில் இந்த புறவழிச்சாலையில் ஏற்கனவே மூன்று மதுபான கடைகள் உள்ளன. தற்போது பள்ளி எதிரில் 20 மீட்டர் தொலைவில் புதிதாக குளிர்சாதன வசதியுடன் கூடிய பார் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கிளப் உடன் கூடிய மதுபான பாரை மூட வலியுறுத்தி விசிக மற்றும் பாஜகவினர் தனித்தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் பாபு அளித்த புகாரின் பேரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஓம் பிரகாசம் உள்ளிட்ட 20 பேர் மீதும், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட துணை தலைவர் அன்பு உள்ளிட்ட 20 பேர் என மொத்தம் 40 பேர் மீது ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.