\
accident
accidentPT

YouTube பார்த்து அறிவியல் ஆய்வு.. சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. பெற்றோர்களே கவனம் தேவை!

YouTube-இல் வீடியோக்களைப் பார்த்து அறிவியல் ஆய்வு மேற்கொள்ள முயன்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
Published on: 

செய்தியாளர் - சுரேஷ், கார்த்திகேயன்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை சோலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையரசு. இவரது மகன் கவின், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். வகுப்பிலேயே முதல் மாணவனாக உள்ள கவினுக்கு, அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி அன்று, வீட்டிற்கு பெயின்ட் அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த தின்னரை வைத்து, ஏதாவது பரிசோதனை செய்ய, சிறுவன் கவின் முடிவு செய்துள்ளான். பின்னர், YouTube-ல் வீடியோவைப் பார்த்து, அதில் குறிப்பிட்ட ஒரு பரிசோதனை செய்வதற்காக, கையில் தீப்பெட்டி, தின்னர் மற்றும் தண்ணீரை எடுத்துக் கொண்டு, வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளான்.

Accident
AccidentPT

அங்கு, தண்ணீரில் திண்ணரைக் கொட்டியபோது, சிறுவன் மீது சிறு துளிகள் விழுந்துள்ளது. ஆனால், அதனை கவனிக்காத சிறுவன் கவின், திண்ணர் கலந்த தண்ணீரில், நெருப்பைப் பற்ற வைத்துள்ளான். அப்போது, எதிர்பாராவிதமாக கவின் மீதும் தீப்பற்றி எரிந்ததில், சிறுவன் அலறித் துடித்துள்ளான். சிறுவன் மொட்டை மாடியில் இருந்ததால், அவனது அலறல் சத்தம், பெற்றோருக்கு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. சில நிமிடங்கள் தீயிலேயே சிறுவன் போராடிய பிறகு, அவனது தந்தை இளையரசு சிறுவனின் சத்தம் கேட்டு, மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அதன்பிறகு, அவனை காப்பாற்றும் முயற்சியில், இளையரசுவுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த கவினின் தாய், தனது மகனுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பேசி, கதறி அழுதார்.

இதற்கிடையே, இந்த விபத்தால் 80 சதவீதம் அளவுக்கு தீக்காயம் அடைந்த சிறுவன் கவின், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிறுவன் கவினுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி, இன்று பரிதாபமாக அவன் உயிரிழந்தான். மகனின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த கவினின் தாய், திடீரென மயங்கி விழுந்ததார். சிறுவயதிலேயே அறிவியல் பரிசோதனைகளில் ஆர்வம் இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், தீ, மின்சாரம் போன்ற விஷயங்களில், பரிசோதனை மேற்கொள்வது, இந்த சிறுவயதில் பெரும் ஆபத்துக்கு வழிவகுக்கும்.

accident
accidentPT

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆய்வுகள் மேற்கொள்வதுதான் சரி. மேலும், YouTube மாதிரியான சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களைப் பார்த்து, ஆய்வுகள் மேற்கொள்வது மிகுந்த ஆபத்துக்கு வழிவகுக்கலாம். எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் YouTube-ல் எதைப் பார்க்கிறார்கள்? என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்துகின்றனர். வகுப்பிலேயே முதல் மாணவனாகவும், அறிவியலில் ஆர்வம் மிகுந்தவனாகவும் இருக்கக் கூடிய சிறுவன் கவினின் உயிரிழப்பு, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற தேவையையும் ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com