திருப்பரங்குன்றம் பங்குனி தேரோட்டம்: ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த தேர்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடைபெறும் பங்குனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷங்கள் எழுப்பியவாறு தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் பங்குனி தேரோட்டம்
திருப்பரங்குன்றம் பங்குனி தேரோட்டம்pt desk

தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவில் நாள்தோறும் காலை மாலை வேளைகளில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க சப்பரத்திலும், தங்க மயில், தங்க குதிரை, வெள்ளி பூத வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், யானை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பரங்குன்றம் பங்குனி தேரோட்டம்
திருப்பரங்குன்றம் பங்குனி தேரோட்டம்pt desk

இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மகா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தையொட்டி அதிகாலை 5.40 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு காவல் தெய்வமான கருப்பசாமி சன்னதிக்கு வந்து அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனையடுத்து தெய்வானையுடன் முருகப்பெருமான் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தேரின் சக்கரத்தில் தேங்காய் சூறைவிடப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து கோயில் வாசலில் இருந்து காலை 6.25 மணி அளவில் தேர் புறப்பட்டது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்கள், ’வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா' என்று கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர். சிறிய சட்டத்தேரில் எழுந்தருளிய விநாயகர் பெருமான் முன்னே செல்ல, அதை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதையடுத்து சட்டத்தேரும், பெரிய தேரும் ஒன்றன்பின் ஒன்றாக கிரிவல பாதையில் ஆடி, அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து செல்கிறது.

திருப்பரங்குன்றம் பங்குனி தேரோட்டம்
திருப்பரங்குன்றம் பங்குனி தேரோட்டம்pt desk

3 கி.மீ. சுற்றளவு கொண்ட திருப்பரங்குன்றம் மலையின் கிரிவல பாதையில் சுமார் 5 மணி நேரம் தேர் வலம்வந்த பின், காலை 11:30 மணி அளவில் தேர் மீண்டும் கோயில் வாசலுக்கு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்போது பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக வாழைப் பழங்களை சூறைவிட்டு முருகப் பெருமானை வழிபடுவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com