கோலாகலமாக தொடங்கியது நெல்லையப்பர் ஆனித்திருவிழா தேரோட்டம்
தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த நெல்லையப்பர் கோயிலில் ஆனித்தேர்திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிலையில், ஆனித்திருவிழா தேரோட்டம் இன்று காலை 8.30 மணியளவில் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெல்லையப்பர் கோயில் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். நெல்லையப்பர் கோவில் நான்கு ரதவீதிகளிலும் பெண்கள் வண்ண கோலமிட்டு நெல்லையப்பர் காந்திமதி அம்மனை வரவேற்கின்றனர்.
இது தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய தேர் ஆகும். சுமார் 450 டன் எடை கொண்டது இத்தேர். இதன் அச்சு லண்டனில் ஆங்கிலேயர்களால் தயாரிக்கப்பட்டது. முற்றிலும் மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் இந்தியாவின் மிகப்பெரிய தேர். 515 ஆண்டுகளாக தடையின்றி நடைபெறும் உலகின் பழமையான தேரோட்டம். 1505 ம் ஆண்டு முதல் நெல்லையில் தேரோட்டம் நடைபெறுகிறது.
கோவிலில் செயின்பறிப்பு திருட்டை தடுக்க சேப்டி பின் வழங்கப்படுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளனர். ஆளில்லா குட்டி விமானம் மூலமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.