\
கைலாசநாதர் ஆலயம்
கைலாசநாதர் ஆலயம்PT

கம்பீரமாக நிற்கும் கோயில்.. 22 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் இல்லை.. காத்திருக்கும் கைலாசநாதர் ஆலயம்!

22 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாத பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில் | 46 ஆண்டுகளாக தேரோட்டமும் இல்லை
Published on: 

செய்தியாளர்: ஐடா அருட்செல்வி & இ.முத்துப்பாண்டியன்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில், பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலாகும். மன்னர்கள் கால கட்டடக்கலை, பிரம்மாண்ட கோபுரங்கள், கலைநயம் மிக்க சிற்பங்கள், பழமையான ஓவியங்கள் எனப் பல்வேறு சிறப்புகளை இந்தக் கோயில் கொண்டுள்ளது.

சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலில் ராஜகோபுரம், நடுக்கோபுரம், மேல்கோபுரம் என 3 கோபுரங்களும், 6 விமானங்களும் உள்ளன. யாளி, யானை, சிங்கம் உள்ளிட்ட சிற்பங்களும், தெய்வ உருவங்களும் கோயிலின் பழமையை எடுத்துக்காட்டுகின்றன. விஜயநகர கால ஓவியங்களும் இங்கு காணப்படுகின்றன.

கைலாசநாதர் ஆலயம்
கைலாசநாதர் ஆலயம்PT

கைலாசநாதர் எனப்படும் பதரிவனேஸ்வரர், இலந்தையடிநாதர் சுவாமி மற்றும் பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சித்திரை, வைகாசி விசாகம், மகா சிவராத்திரி உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்களும், பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.

பிரம்மதேசம் கோயிலின் வரலாறு மட்டுமின்றி, அதன் தோற்றமும் திரைப்படத் துறையினரை ஈர்த்துள்ளது. ‘சக்தி’, ‘மர்மதேசம்’, ‘சீமராஜா’, ‘சித்தி’ உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் காட்சிகள் இப்பகுதியில் படமாக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட கோயில் தற்போது பராமரிப்புக்காகக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கோயிலின் திருத்தேரில் கடந்த 46 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. பழுதடைந்த நிலையில் அந்தத் தேர் தற்போது காட்சிப் பொருளாக நிற்கிறது.

கைலாசநாதர் ஆலயம் தேர்
கைலாசநாதர் ஆலயம் தேர்PT

மேலும், கடந்த 22 ஆண்டுகளாக கோயிலில் கும்பாபிஷேகமும் நடைபெறவில்லை. இதனால் கும்பாபிஷேகத்திற்காகவும், கோயில் திருப்பணிகள் நிறைவடையவும் பக்தர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வருகின்றனர்.

இதையடுத்து கோயில் திருப்பணிகளுக்காக அரசு சார்பில் ரூ.4 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கோபுரங்களில் மரம், செடி, கொடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது.

கைலாசநாதர் ஆலயம்
கைலாசநாதர் ஆலயம்PT

திருப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பதும் 46 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள தேரோட்டமும் மீண்டும் நடைபெற வேண்டும் என்பதும் பிரம்மதேசம் பகுதி மக்கள் மற்றும் பக்தர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

கைலாசநாதர் ஆலயம்
சினிமாவை மிஞ்சிய 40 கி.மீ சேஸிங்.. ஓடும் காரின் Roof-ல் தொங்கிய தமிழ்நாடு போலீஸ்! பரபரப்பு சம்பவம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com