
நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி இரவு இவர் தன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் ஜெகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை போலீசார், பாளையங்கோட்டைச் சேர்ந்த விக்கி உட்பட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஐந்து நபர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தால் மட்டுமே உடலை பெறப்போவதாகக் கூறி உயிரிழந்த ஜெகனின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகியும் மண்டல சேர்மனின் கணவருமான மூளிகுளம் பிரபு, வெளியூருக்கு தப்ப முயன்றபோது மாவட்ட எல்லையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவராக பிரபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.