நெல்லை: மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் இளைஞரை மீட்டு குணப்படுத்தி பெற்றோருடன் இணைத்த ஆட்சியர்

நெல்லை: மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் இளைஞரை மீட்டு குணப்படுத்தி பெற்றோருடன் இணைத்த ஆட்சியர்
நெல்லை: மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் இளைஞரை மீட்டு குணப்படுத்தி பெற்றோருடன் இணைத்த ஆட்சியர்

கொரோனா முதல் ஊரடங்கின் போது நெல்லையில் சாலையோரம் மீட்கப்பட்ட ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர், காவல்துறையினரால் மீட்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்துவந்தார். இந்நிலையில் பீகாரில் இருந்த அவருடைய பெற்றோரிடம் அவர் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொரோனா முதல் அலை பரவலின் போது ஏராளமான மக்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டனர். இதில் பல குடும்பங்கள் உயிர் இழப்புகளையும் சந்தித்திருந்தனர். ஆதரவற்ற நிலைக்கும் பலர் தள்ளப்பட்டனர். இப்படியான சூழலில்தான் நெல்லையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், சாலையோரம் ஆதரவற்று கிடந்த மக்களை மீட்கப்பட்டனர். அப்படி மீட்கப்பட்டோர், தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் மருத்துவ உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி, சோயா தொண்டு நிறுவனம் அந்தப் பணிகளை மேற்கொண்டது.

அதன்படி நெல்லை மாநகரில் சாலையோரமாக கிடந்த ஆதரவற்ற மக்களை மீட்டு அவர்கள் முகாமில் தங்க வைத்து உணவு மருத்துவ உதவி வழங்கும் பணி கடந்த 2020 ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மனநல ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த மக்களை தனியாக பிரித்து அவர்களுக்காக, மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோருக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் என தனியாக தொடங்கி அதில் அவர்களுக்கான உரிய மனநல மருத்துவ சிகிச்சையும், மூன்று வேளை உணவும் இலவசமாகவே தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது.

அப்படி கடந்த 2020 ல் சாலையோரம் ஆதரவற்றோர் மக்களை மீட்ட போது, அதில் பீகாரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர் முகமது நிசாரும் ஒருவராக இருந்தார். முதலில் பேசாமலேயே இருந்த அந்த இளைஞரை முகாமில் இருந்தவர்கள் ராமன் என்றே அழைத்து வந்துள்ளனர். சிகிச்சை கொடுக்கப்பட்ட சில வாரங்களில் ராமன் என அழைக்கப்பட்ட இளைஞர் ஒருநாள் மாலை வேளையில் தொழுகை செய்துள்ளார். இதனை தொடர்ந்து, அவர் இஸ்லாமிய இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து ஹிந்தியில் பேசிய அவரிடம், சிகிச்சை அளித்து விசாரித்ததில், தான் பீகார் மாநிலம் டர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக முகாமிலிருந்தவர்கள் டர்பங்கா மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட தன்னார்வலர் சரவணன், இளைஞரின் குடும்ப உறவினர்கள் குறித்து விவரம் கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக டர்பங்கா மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் பெயர் முகமது நிசார் என்பதும், அவரது தந்தை அங்கு வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து நெல்லை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, நிசாரின் பெற்றோர் கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் தங்கள் மகனைத் தேடி அலைந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களுக்கு நிசாரின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பலனாக முகமது நிசாரின் தந்தை இன்று நெல்லை மாவட்டம் வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஷ்ணு, முகமது நிசாரின் தந்தையிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் உரிய ஆவணங்களை பெற்றுக் கொண்டு மனநலம் பாதித்து தற்போது குணமடைந்துள்ள அவரது மகனை ஒப்படைத்தார். முன்னதாக அவனுக்கு புத்தாடைகள் கொடுத்து இனி வரும் நாட்களில் பீகாரில் தொழில் செய்வதற்கான உதவிகளையும் செய்வதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உறுதி அளித்தார்.

2019 ம் ஆண்டு பீகாரில், வீட்டில் இருந்து காணாமல் போன மகன் இரண்டு வருடங்களுக்கு பின்பு குணமாகி கிடைத்ததில் பெரு மகிழ்ச்சியும், கண்ணீருடமாக ஆரத்தழுவி தன் மகனை அழைத்துச் சென்றார் தந்தை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com