நெல்லை போலீஸ்
நெல்லை போலீஸ்pt

நெல்லை: இரவு பணியின்போது ‘புஷ்பா 2’ சென்ற உதவி காவல் ஆணையர்! சிக்கியது எப்படி?

நெல்லை மாநகரில் இரவு ரோந்து பணியின் போது போலீஸ் உதவி காவல் ஆணையர் தியேட்டரில் சினிமா பார்க்க சென்ற சம்பவம் நடந்துள்ளது.
Published on

செய்தியாளர்: ராஜுகிருஷ்ணா

நெல்லை மாநகர பகுதியில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் இரவு நேரங்களில் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை போலீஸ்
நெல்லை போலீஸ்

அதன்படி நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) மூர்த்தி மேற்பார்வையில் நெல்லை மாநகர சரகத்தில் இரவு ரோந்து பணியில் பெண் இன்ஸ்பெக்டர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். டவுண், சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 இடங்களிலும் பெண் இன்ஸ்பெக்டர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு தலைமையாக உதவி காவல் ஆணையர் செந்தில்குமார் பணியில் இருந்தார்.

புஷ்பா-2 திரைப்படத்திற்கு சென்ற காவல் உதவி ஆணையர்!

இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் அவர் தனது ரோந்து வாகனத்தில் சந்திப்பு உடையார்பட்டி பகுதியில் உள்ள தியேட்டருக்கு சென்றுள்ளார். அங்கு புஷ்பா-2 திரைப்படம் பார்ப்பதற்காக சென்ற உதவி காவல் ஆணையாளர் செந்தில்குமார் தனது ஜீப்பில் காவலுக்கு டிரைவரை அமர்த்திவிட்டு சென்றுள்ளார். அந்த சமயத்தில் மாநகர காவல் ஆணையாளர் மூர்த்தி, வயர்லெஸ் மைக்கில் வந்து உதவி காவல் ஆணையாளர் செந்தில்குமாரை தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் சுமார் 15 நிமிடங்கள் வரையிலும் உதவி காவல் ஆணையர் செந்தில்குமார் தொடர்பு கொள்ளவில்லை.

புஷ்பா 2
புஷ்பா 2

இதனால் கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார், உதவி காவல் ஆணையர் செந்தில்குமாரின் செல்போனில் சென்று தகவல் தெரிவிக்கவே, பதறியடித்துக்கொண்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்தவர், மைக்கில் கமிஷனரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது கமிஷனர் “எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “தச்சநல்லூர் பகுதியில் ஒரு பிரச்னை என்று கூறியுள்ளார். அதனால் அங்கு நிற்கிறேன்” என்று பொய் சொல்லியுள்ளார்.

பொறுப்பற்ற செயலை கடிந்துகொண்ட காவல் ஆணையர்..

ஆனால் உண்மை நிலவரத்தை ஏற்கனவே அறிந்திருந்த மாநகர கமிஷனர் மூர்த்தி, ஓபன் மைக்கில் “இரவு பணி பார்க்காமல் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்து கொண்டிருக்கிறீர்கள். மாநகரில் இன்று இரவு பணியில் முழுவதுமாக பெண் இன்ஸ்பெக்டர்கள் இருக்கும் நிலையில், நீங்கள் எந்தவித பொறுப்பும் இன்றி இப்படி செயல்படுவது நியாயமா?” என கடிந்து கொண்டுள்ளார். இந்த உரையாடல்கள் அனைத்தும் ஓபன் மைக்கில் நடந்ததால் மாநகரம் முழுவதும் போலீசாரிடையே இந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

நெல்லை போலீஸ்
நெல்லை போலீஸ்

கடந்த வாரம் டவுண் பகுதியில் இரவு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதலுக்கு கும்பல் ஒன்று முயன்றது. இந்நிலையில் பெண் இன்ஸ்பெக்டர்கள் இரவு ரோந்து பணியில் இருந்த நேரத்தில், உயர் அதிகாரி ஒருவர் புஷ்பா-2 படம் பார்த்தால் மாநகரில் எப்படி சட்டம் -ஒழுங்கு சரியாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com