திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த 28ஆம் தேதி கந்தசஷ்டி பெருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்குச் சென்று தங்கி விரதமிருந்து வருகின்றனர். இதனால் கடற்கரை பகுதியில் பக்தர்கள் குவிந்த வண்ணமாக இருக்கின்றனர்.
இந்நிலையில், கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவல்துறை தென்மண்டல தலைவர் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.