திருச்செந்தூர் | அரசு மருத்துவமனை விபத்து சிகிச்சை பிரிவில் சொகுசாக தூங்கும் தெரு நாய்
செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு இந்த அரசு மருத்துவமனை விபத்து சிகிச்சை பிரிவில் தெரு நாய்கள் உலா வந்தன. இதை யாரும் கண்டு கொள்ளாததால் அதிலொரு தெரு நாய், விபத்து சிகிச்சை பிரிவில் சொகுசாக படுத்துத் தூங்கியது. ஆனால், அங்கு பணியில் இருந்த மருந்துவர்களோ, செவிலியர்களோ கண்டுகொள்ளவில்லை. இது போல் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன.
இந்த நாய்கள் நோயாளிகளை கடிக்கும் நிலை உள்ளது. மேலும் நோயாளிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.